வார்னர் புதிய கேப்டன்: ஆஸி., அணி அறிவிப்பு | ஜனவரி 22, 2018

  தினமலர்
வார்னர் புதிய கேப்டன்: ஆஸி., அணி அறிவிப்பு | ஜனவரி 22, 2018

மெல்போர்ன்: முத்தரப்பு ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு சர்வதேச ‘டுவென்டி–20’ தொடர், அடுத்த மாதம் (பிப். 3–21) ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் 14 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராக வேண்டியிருப்பதால், ‘ரெகுலர்’ கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு, விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து துவக்க வீரர் டேவிட் வார்னர், அணியை வழிநடத்த உள்ளார். சிட்னி சிக்சர்ஸ் அணி வேகப்பந்துவீச்சாளர் பென் டிவார்ஷுயிஸ், அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, ஹோபர்ட் ஹரிகேன்ஸ் வீரர் ஷார்ட், அறிமுக வாய்ப்பு பெற்றுள்ளனர். கெண்டைக்கால் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்ட கிறிஸ் லின், தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஸி., அணி: டேவிட் வார்னர் (கேப்டன்), ஆரோன் பின்ச், ஆஷ்டன் அகார், அலெக்ஸ் கேரி, பென் டிவார்ஷுயிஸ், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஷார்ட், பில்லி ஸ்டான்லேக், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆன்ட்ரூ டை, ஆடம் ஜம்பா.

ரிச்சர்ட்சன் அறிமுகம்

அடுத்த மாதம் இறுதியில் தென் ஆப்ரிக்கா செல்லவுள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், வரும் மார்ச் 1–5ல் டர்பனில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் போர்ட் எலிசபெத் (மார்ச் 9–13), கேப்டவுன் (மார்ச் 22–26), ஜோகனஸ்பர்க் (மார்ச் 30 – ஏப். 3) நகரங்களில் நடக்கவுள்ளன. டெஸ்ட் தொடருக்கு முன், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க லெவன் அணிகள் வரும் பிப். 22–24ல் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவுள்ளது.

இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுழற்பந்துவீச்சாளர் ஜான் ஹாலந்து, வேகப்பந்துவீச்சாளர் ஜி ரிச்சர்ட்சன் அறிமுக வாய்ப்பு பெற்றுள்ளனர்.

டெஸ்ட் அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர் (துணைக் கேப்டன்), கேமிரான் பென்கிராப்ட், ஜாக்சன் பேர்டு, பாட் கம்மின்ஸ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஹேசல்வுட், ஜான் ஹாலந்து, உஸ்மான் கவாஜா, நாதன் லியான், மிட்சல் மார்ஷ், ஷான் மார்ஷ்,  டிம் பெய்னே, ஜி ரிச்சர்ட்சன், மிட்சல் ஸ்டார்க்.

மூலக்கதை